கதை சொல்லவே கட்சி நடத்துகிறேன்: சீமான் கொடுத்த ‘கல கல’ வாக்குமூலம்!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைத் தான் சந்தித்த அனுபவம் குறித்து பேசி மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம், மாவீரர் தினம் ஆகியவற்றை முன்னிட்டு தமிழீழ ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன.


விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் தனக்குமான சந்திப்பை சீமான் ஒவ்வொரு முறை கூறும்போதும் அது சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னதாக ஆமைக்கறி சாப்பிட்டதாக கூறிய சீமான் இந்த முறை தனக்கு விருப்பமான உணவுகளை பிரபாகரன் தெரிந்துவைத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

“போர்ச் சூழலில் நான் அங்கு சென்றிருந்தபோது நான் என்னவெல்லாம் சாப்பிடுகிறேன் என்பதை ஒருவர் குறித்துக்கொண்டார். ஏனென்று கேட்டால் தலைவர் தெரிந்துகொள்வதற்காக எடுக்கச் சொன்னார் என்று சொன்னார். தம்பி எதை விரும்பி சாப்பிடுகிறேன் என்பதை தலைவர் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளார்” என்று சொல்லிவிட்டு தனக்கேயுரிய பாணியில் சிரித்துக்கொண்டார்.